வீடு தேடி வரும் இயற்கை உரம்!  


வீடு தேடி வரும் இயற்கை உரம்!  


சென்னை: செப்.20-2019


செல்பேசி மூலம் தகவல் தெரிவித்தால் இயற்கை உரம் வீட்டைத் தேடி வரும் என்று, பெருநகரச் சென்னை மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பெருநகரச் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் நாள்தோறும் சுமார் 4 ஆயிரத்து 930 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இவற்றை மட்கும் குப்பை, மட்காத குப்பை எனப் பிரிப்பதுடன்,  மட்கும் குப்பை இயற்கை உரமாக மாற்றப்பட்டு, கிலோ 20 ரூபாய் வீதம் மக்களிடம் விற்பனை செய்யப்படுகிறது.


சென்னை மாநகராட்சியில் 139 நுண்ணுர மையங்கள், 537 மூங்கில் தொட்டி உர மையங்கள், 175 சிறு தொட்டிகள், 1,711 உறைக்கிணறு மையங்கள், 21 புதைகுழி மையங்கள், 2 மண்புழு உர மையங்கள் ஆகியவற்றின் மூலம் மக்கும் குப்பைகளில் இருந்து தரமான இயற்கை உரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

மாநகராட்சி பூங்காக்கள் மற்றும் பொதுமக்களுக்கு இதுவரை 160 மெட்ரிக் டன் உரம் மலிவு விலையில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது மாநகராட்சியிடம் 190 மெட்ரிக் டன் உரம் கையிருப்பு உள்ளது. மாநகராட்சியில் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் உரங்கள் பயன்படுத்துவதற்கு உகந்தவை என, தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த உரங்களை மக்களின் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்ய ஏதுவாக, மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள +91 94451 94802 என்னும் எண் அல்லது வாட்ஸ்-அப் செயலியிலும் தொடர்பு கொள்ளலாம். வீட்டுக்கு வந்து உரத்தைக் கொடுக்கும் போது அதற்கான ரூபாயைக் கொடுத்தால் போதும் என்று கூறப்பட்டுள்ளது.