84 ஏக்கரை குத்தகைக்கு விடும் தொடர்வண்டித் துறை!
சென்னை: செப்.22-2019
தமிழகத்தில் 14 இடங்களில் உள்ள 84 ஏக்கர் நிலங்களை நீண்டகாலக் குத்தகைக்கு விடுவதற்கான நடவடிக்கைகளை, தொடர்வண்டித் துறையின் நில மேம்பாட்டு ஆணையம் தொடக்கியுள்ளது.
நாடு முழுவதும் தொடர்வண்டித் துறையின் துறையின் எதிர்காலப் பயன்பாட்டுக்காக நிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலங்களை முறையாகப் பயன்படுத்த இந்தத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இத்தகைய நிலங்கள் குடியிருப்பு வணிகம் நிலையப் பயன்பாடு என மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் குடியிருப்புப் பயன்பாட்டுக்கான நிலங்களில் இத்துறை ஊழியர்களுக்கான குடியிருப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
இந்நிலையில் வணிகப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களின் தற்போதைய நிலவரம் குறித்து ஆராய்ந்த தொடர்வண்டி வாரியம் இந்த நிலங்களை வணிக வளாகங்களைக் கட்டுவதற்காக நீண்டகாலக் குத்தகையில் வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை இத்துறையின் நில மேம்பாட்டு ஆணையம் தொடக்கியுள்ளது.
மாநில வாரியாக நிலங்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இது குறித்து ரயில்வே நில மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் எங்கள் துறைக்குச் சொந்தமாக 16 இடங்களில் வணிகப் பயன்பாட்டுக்கான காலி நிலங்கள் உள்ளன. இதில் சென்னையில் அம்பத்துார் பாடி விழுப்புரம் பகுதிகளில் உள்ள நிலங்களுக்குக் குத்தகை இறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 14 இடங்களில் 84 ஏக்கர் நிலங்கள் குத்தகைக்கு வழங்கத் தயார் நிலையில் உள்ளன. இந்நிலங்களை நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் தனியார் நிறுவனங்களுக்கு வழங்க, தொடர்வண்டி நில மேம்பாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது.
முதற்கட்டமாகச் சென்னை அயனாவரத்தில் 8.6 ஏக்கர் நிலங்களை வணிக மேம்பாட்டுக்காக 45 ஆண்டு குத்தகைக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆரம்பக்கட்டத் தொகை 76 கோடி ரூபாயாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள காலி நிலங்களையும் நீண்டகாலக் குத்தகைக்கு விடும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன என்றனர்.