ஐந்தாவது முறையாகக் கிருஷி கர்மான் விருது!
சென்னை: செப்.22-2019
எண்ணெய் வித்துகளை அதிகளவில் உற்பத்தி செய்ததற்காக, 2017-18 ஆம் ஆண்டுக்கான, மத்திய அரசின் கிருஷி கர்மான் விருதை ஐந்தாவது முறையாகப் பெற்று, தமிழகம் சாதனை படைத்துள்ளது.
தமிழக அரசு எடுத்த, பல்வேறு முயற்சிகளால், மாநிலத்தில், வேளாண் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இவ்வகையில் கூடுதலாக மகசூலைப் பெற்றதற்காக, நான்கு முறை, கிருஷி கர்மான் விருதை, தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்கி உள்ளது.
கடந்த, 2016-17இல், தமிழகத்தில் கடும் வறட்சி நிலவியது. அப்போது, அரசு எடுத்த முயற்சியால், 2017 - 18ம் ஆண்டில், 107.13 இலட்சம் டன், உணவு தானியங்களை உற்பத்தி செய்து, சாதனை அளவு எட்டப்பட்டது. எண்ணெய் வித்துகளில், 10.38 இலட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. உற்பத்தித் திறன், எக்டருக்கு, 2,729 கிலோ என்னுமளவில் அதிகரித்துள்ளது. இது, அகில இந்திய சராசரி உற்பத்தித் திறனை விட, 113% அதிகரித்துள்ளது.
எண்ணெய் வித்துப் பயிர்களில் செய்த சாதனைக்காக, 2017-18ஆம் ஆண்டின், கிருஷி கர்மான் விருதுக்கு மத்திய அரசால் தமிழக அரசு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கடிதத்தை, வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு, வேளாண் செயலர், ககன்தீப்சிங் பேடி, வேளாண் இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி ஆகியோர், சென்னை, தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் காட்டி வாழ்த்துத் பெற்றனர்.