சரக்குந்துகளை இயக்க உரிமையாளர்கள் மறுப்பு!
சென்னை: செப்.20-2019
பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாத வரையில் கொள்கலன் சரக்குந்துகளை (கண்ட்டெய்னர் லாரிகளை) இயக்க மாட்டோம் என, அவற்றின் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
சென்னைத் துறைமுகம், எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகம் ஆகியவற்றில் இருந்து தினமும் ஆயிரத்துக்கும் அதிகமான கொள்கலன்கள் (கண்ட்டெய்னர்) ஏற்றுமதிக்காகவும், இறக்குமதிக்காகவும் கையாளப்படுகின்றன. இவற்றை அதிகளவில் ஏற்ற மாட்டோம் எனவும், ஒரு சரக்குந்தில் ஒரு கொள்கலனை மட்டுமே ஏற்றுவோம் எனவும் வலியுறுத்தி, கடந்த 16-ஆம் தேதி முதல் கொள்கலன் சரக்குந்து உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நான்காவது நாளாக வேலைநிறுத்தம் நீடித்தது.
இந்நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்துக் கொள்கலன் சரக்குந்து உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம், இராயபுரத்தில் உள்ள சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
2014-ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தப்படி 20 அடி கொள்கலனுக்கு 40 அடி கொள்கலன் வாடகை கொடுக்க வேண்டும். 40அடி கொள்கலனுக்குக் கூடுதலாக 1,000 ரூபாய் வழங்க வேண்டும். வெற்றுக் கொள்கலனுக்கு ரூ.3,500 வழங்க வேண்டும்.
ஒரு சரக்குந்தில் ஒரு கொள்கலனை மட்டுமே ஏற்றுவோம். அதற்குத் துறைமுக நிர்வாகம் உடன்பட்டால் உடனடியாகச் சரக்குந்துகளை இயக்குவோம். இல்லையெனில் வேலை நிறுத்தம் தொடரும் என்று அவர்கள் கூறினர்.