நிரம்பி வரும் ஏரிகள்; மகிழ்ச்சியில் மக்கள்!

 


நிரம்பி வரும் ஏரிகள்; மகிழ்ச்சியில் மக்கள்!


சென்னை : செப்.20-2019


திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாகக் கொட்டித் தீர்த்து வரும் கனமழையால் சென்னையின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாகக் கடும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை மற்றும் திருவள்ளூரில் இரவு நேரங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் நீர் ஆதாரங்களான முக்கிய ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், மேலும் 2 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால், நீர்வரத்துத் தொடர்ந்து அதிகரித்து, விரைவில் ஏரிகள் நிரம்ப வாய்ப்புள்ளது.


35 அடி பூண்டி ஏரியின் நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்துள்ளது. ஏரிக்கு 200 மில்லியன் கன அடி நீர் வந்தது. தற்போது பூண்டி ஏரிக்கு 2000 கன அடி, புழல் ஏரிக்கு 315 கன அடி, சோழவரம் ஏரிக்கு 347 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில மாதங்களாகக் காய்ந்து கிடந்த மதுராந்தகம் ஏரிக்கும் நீர்வரத் தொடங்கியுள்ளது. இதனால், நீருக்காக அலைந்த சென்னை மக்களும், பாசன நீரின்றித் தவித்த விவசாயிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.