பிரதமர் மோடியின் நம்பிக்கைக்கு உரிய அதிகாரிகள்!


பிரதமர் மோடியின் நம்பிக்கைக்கு உரிய அதிகாரிகள்!


புதுதில்லி : செப்.22-2019


பிரதமர் அலுவலகத்தில்  இரண்டு அதிகாரிகள் ஆற்றல் மிக்கவர்களாக இருந்தனர். ஒருவர், நிருபேந்திர மிஸ்ரா; இன்னொருவர், பி.கே.மிஸ்ரா. இவர்கள், பிரதமர் மோடியின் முந்தைய ஆட்சியிலும் அதிகாரிகளாக இருந்தனர். மோடி மீண்டும் பிரதமரான பிறகு, நிருபேந்திர மிஸ்ரா நீடிப்பது கடினம் எனப் பேசப்பட்டது.


சி.பி.ஐ., மூத்த அதிகாரிகளுக்குள் பிரச்னை; அந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை போனது, ரிசர்வ் வங்கி விவகாரம் போன்ற விஷயங்களை, நிருபேந்திர மிஸ்ரா சரியாகக் கையாளவில்லை என, இதற்குக் காரணம் கூறப்பட்டது. ஆனால், அவர், இந்த ஆட்சியிலும் பதவியில் நீடித்ததோடு, அவருக்கு அமைச்சர் தகுதியும் கொடுக்கப்பட்டது. இருந்தாலும் நான்கே மாதங்களில், நிருபேந்திர மிஸ்ரா பதவி விலகினார். சொந்த காரணங்களுக்காக அவர் பதவி விலகியதாகச் சொல்லப்பட்டாலும், 'நீங்கள் போய் வாருங்கள்' என, பாசமாகச் சொல்லப்பட்டதாம்.


இப்போது, பிரதமர் அலுவலகத்தில் ஆற்றல் மிக்கவராக இருப்பவர், பி.கே.மிஸ்ரா. முதன்மைச் செயலரான இவருக்கு, அமைச்சர் தகுதி கொடுக்கப்பட்டுள்ளது. இவர் மீது, மோடிக்கு ஏகப்பட்ட நம்பிக்கை உண்டு.


மிஸ்ரா 1977 ஆம் ஆண்டில் குஜராத் மாநில இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக ஆனவர். மோடி, முதன் முறையாகக் குஜராத் முதல்வரான போது, அவருக்கு அரசு தொடர்பான பல விஷயங்களை எடுத்துச் சொன்னவர் மிஸ்ரா தான்.

அதனால் தான், அவர் மீது, மோடிக்கு அவ்வளவு நம்பிக்கை. மிஸ்ராவைப் போலவே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மீதும் பிரதமர் மோடி அதிக நம்பிக்கை வைத்துள்ளார். தோவலுக்கும் அமைச்சர் தகுதி வழங்கப்பட்டுள்ளது.